அனைவருமே இங்கு குற்றவாளிகள்தான். குற்றம் செய்யாதவர்கள் அந்தக் கூட்டத்தில் மிகவும் அபூர்வமாகவே இருந்தார்கள். சிறிய குற்றம் செய்தவர்களின், பெரிய குற்றம் செய்தவர்களின் சமூகம்...
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக்கூடிய வழிமுறைகள் சரியாக இல்லை.
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் வெளிச்சத்தில் குற்றவாளிகளை நோக்கி கூறப்படும் குற்றச்சாட்டுகள் பலவீனங்களாக இருந்தன. பலவும் நம்ப முடியாதவையாக இருந்தன. சில விஷயங்கள் நம்பக்கூடிய வகையில் இருந்தன என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
ஆனால், பெரும்பாலான சட்டங்களும் சட்டத்தின் பாதையில் செயல் படுவதில்லை. ஏராளமான குறைபாடுகள் இருக்கின்றன.... பிரச்சினைகள் இருக் கின்றன. சதித்திட்டங்களுக்கும் சிறிதும் குறை இல்லை.
நாயும் பூனையும் பாம்பும் கீரியும் கிளியும் அணிலும் அவருடைய வீட்டில் ஒன்றாகவே வாழ்கின்றன. பரம எதிரிகளை ஒன்றாக இருக்கும்படி செய்யக்கூடிய மந்திர சக்தி தன்னிடம் இருக்கிறது என்று அவர் நம்புகிறார்.வளர்ப்பு மிருகங் களும் வினோத உயிரினங்களும் பறவைகளும் அவருடைய பலவீனம். ஒருமுறை ஒரு நரியையும் குரங்கையும் அவர் அடுத்தடுத்த கூண்டுகளில் வளர்த்தார். வளர்ந்து பெரிதாகி தன்னைத் தானே பார்த்துக் கொள்ள முடியும் என்ற நிலை உண்டானபோது,
அவை பல பிரச்சினைகளை உண்டாக்கின.
வீட்டிலும் ஊரிலும் அவற்றைப் பற்றி நிறைய விவாதங்கள் உண்டாயின.
எவ்வளவோ புகார்கள் எழுந்தன. நரி மிகவும் பெரியதாக ஆன பிறகு, அவன் தன் விருப்பப்படி வெளியேறிச் சென்று விட்டான். இவ்வளவு நாட்களாக பாதுகாத்து வளர்த்த மனிதரைப் பார்த்து, பார்த்ததைப் போலவே காட்டிக் கொள்ளவில்லை.
அந்த நடத்தை அவரை மிகவும் கவலைப்படச் செய்தது. நரியும் நாயும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தோன்றினாலும், குணத்தில் மிகவும் அதிகமான வேறுபாடு இருந்தது. நாயைப்போல அன்பு கொண்ட... தின்ற சோற்றுக்கு நன்றி கொண்ட இன்னொரு மிருகம் இந்த உலகத்தில் வேறு இல்லை என்பதை அவர் அனுபவத்தின்மூலம் தெரிந்து வைத்திருந்தார்.
குரங்கு நல்லவனாக இருந்தாலும், அந்த இனத்திற்கென்றே இருக்கக்கூடிய முரட்டுக் குணம் அவனை தவறான வழியில் செல்ல வைக்கிறது.
குரங்கின் தாவும் குணம்! அதைப் பற்றி ஆழமாகப் படித்திருக்கிறார்.
கூர்ந்து கவனித்திருக்கி றார். வேறு வழியில்லாத நிலையில் அவனை அங்கி ருந்து வெளியேற்றினார்.
அதற்குப் பிறகும் அந்த குஞ்ஞிராமன் பல முறைகள் தன்னுடைய வீட்டையும் சுற்றியுள்ள பகுதிகளையும் வந்து பார்த்த விஷயத்தை அவர் மறக்கவில்லை.
அவனை எந்த இடத்தில் வைத்து பார்த்தாலும், அவரை அடையாளம் கண்டுபிடித்து விடுவான். அவன் எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருந்தாலும், அழைத்தால் சந்தேகப் பார்வையுடன் பயந்து கொண்டும் நடுங்கிக் கொண்டும் அருகில் வருவான்.
சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்தால், கையை நீட்டி வாங்கிக் கொள்வான்.
" நண்பா... நீ இவ்வளவு காலமும் எங்கு இருந்தாய்?'' என்று கேட்டால், அவனுக்கு அந்த கேள்விக்கான பதில் புரிந்தது. ஒரு வகையில் பார்க்கப் போனால், அவன் உதவுபவனாகவும் தொல்லைகள் தருபவனாகவும் இருந்தான். அவன் இல்லாமற்போனது நீண்ட காலம் அவருக்கு கவலையை அளிக்கக்கூடிய நினைவாக இருந்தது.
அன்பு செலுத்தி செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட ஒரு மகன் போக்கிரியாக மாறும் போது உண்டாகக்கூடிய ஒரு தந்தையின் மனநிலை யாக அது இருந்தது. எந்த அளவிற்கு ஊர் சுற்றியாக இருந்தாலும், அவன் தன்னுடைய மகன் என்ற உணர்வு எந்த தந்தையையும் தளர்வடையச் செய்து விடும். அவரும் அப்படிப்பட்ட ஒரு மனிதராக இருந்தார். அந்த மீறும் குணம் படைத்தவனைப் பற்றியுள்ள அன்பு நிறைந்த இனிய நினைவுகள் பல வேளைகளில் அவருடைய கண்களை ஈரமாக்கின். இனி எந்தச் சமயத்திலும் நரியையும் குரங்கையும் தன்னுடைய வீட்டில் வளர்க்கக்கூடாது, அது ஒரு வீண் வேலை, பயனற்ற செயல் என்ற முடிவிற்கு அவர் வந்தார். மனிதர்கள் கூறுகிறபடி நடந்து கொண்டாலும், அவை அவற்றிற்கென இருக்கக்கூடிய குணத்திற்கு அடிபணியாமல் இருக்காது.
பிறகு அவர் தன் வீட்டிற்குள் மட்டும் சில உயிரினங்களை வளர்த்து பார்த்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியைச் செய்து பார்த்தார். எந்த உயிரினத்தை வேண்டுமானாலும், நன்கு பழக்கி நட்புடன் இருக்கச் செய்யலாம். ஆனால்,கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்கென இருக்கும் சிறப்புத் தன்மைகள் இருக்கின்றன. தனிப்பட்ட குணங்கள் இருக்கின்றன. உண்ணும் முறைகள் இருக்கின்றன.
இப்போது அவர் கொல்லப்பட்ட ஒரு பஞ்சவர்ணக் கிளியின் இறந்த உடலைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். யாருக்குமே தெரியாமல் புதைத்திருந்த பிணத்தை மண்ணுக்கு அடியிலிருந்து எடுத்து போஸ்ட்மார்ட்டம் நடத்தப் போகும் நிலை...
அனைத்து குற்றவாளிகளுமே அருகில் இருப்பவர்கள்தான்.ஒருவரையொருவர் தெரிந்த வர்கள்...
விடுதலை உணர்வு கொண்ட மிகச் சிறந்த பாடல்களைப் பாடக் கூடிய அந்த பஞ்சவர்ணக் கிளி இனிமேலும் அந்த வீட்டில் அதிக காலம் உயிருடன் இருந்தால், பல ரகசியங்களும் வெளியே வரும். அதனால் அவளைக் கொன்று விடுவதுதான் சரியான செயலாக இருக்கும் என்று அனைவரும் கூடி தீர்மானித்தார்களோ என்னவோ?
கண்ணுக்கு முன்னால் தெரிபவர்கள் அனைவரும் குற்றவாளிகளா? யார்தான் உண்மையான குற்றவாளிகள்? அங்கு நடைபெற்ற பதைபதைப்பான சம்பவத்தில் அவர்கள் யாருக்கும் எந்தவொரு பங்கும் இல்லை என்று எப்படி உறுதியாகக் கூறமுடியும்?
தன்னுடைய மனசாட்சியை முன்னால் நிறுத்தி மட்டுமே குற்ற விசாரணையை நடத்துகிறார்.
உண்மை வெளியே வரக்கூடிய அளவிற்கு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சாட்சிகளை விசாரிக்க வேண்டும்.
அங்கு அவர் ஒரு சாதாரண பார்வையாளர் மட்டுமே. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பக்கமோ குற்றம் சுமத்தியவர்கள் பக்கமோ... எந்தப் பக்கத்திலும் அவர் இல்லை.
நீதிபதியாகவோ கட்சிகளின் வக்கீலாகவோ இல்லாமல் உண்மையை, உண்மையாகவே வெளியே கொண்டுவருவதற்கு முயலக்கூடிய நேர்மையான ஒரு பார்வையாளராக இருக்க முடியுமா என்ற பரிசோதனையில் அவர் இருக்கிறார்.
அவர் அதிகமாக இருக்கக்கூடிய இடம் வீட்டின் வாசலில் வளர்ந்து அடர்த்தியாக நின்று கொண்டிருக்கும் மாமரத்தின் அடிப்பகுதி. அந்த மாமரத்தின் அடிப்பகுதியில் உள்ள தரை, கற்களால் உண்டாக்கப்பட்டு சிமெண்ட் பூசப்பட்டு அதிக நாட்கள் ஆகவில்லை. அந்த மாமரத்தின் அடிப்பகுதிதான் அவருடைய உலகம். அங்கு இருந்துகொண்டுதான் அவர் உலகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பொதுமக்களின் கூட்டம் இல்லை. ஆனால், அவருடைய உறவினர்கள் அருகிலிருக்கும் வளாகத்தில்தான் வசிக்கிறார்கள்.
அந்த வளாகத்தில் நவநாகரீக பாணியில் கட்டப் பட்ட வாழும் வீடு இருக்கிறது.
அதற்குள் நான்கு நபர்கள் இருக்கிறார்கள்.
அவருடைய சகோதரியும் பிள்ளைகளும் என மூன்று பேர். பிறகு இருக்கும் ஒரு நபர்...
அவருடைய மனைவி. ஆனால், அவருக்கு நேரடியாக யாருடனும் எந்தவொரு தொடர்பும் இல்லை.
அவர் தனியாக இருக்கும் ஒரு வீட்டில்தான் வசித்து வந்தார்.
அதிலிருக்கும் அறைகளில் ஒன்றில் இருந்துகொண்டுதான் எழுதுவார்.
இன்னொரு அறை... விருந்தினர் எப்போதாவது வருவதாக இருந்தால், அவர்கள் இருப்பதற்காக உள்ளது. அவர் தனியாக வசிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
தலைக்கு நலம் இல்லாத ஒரு ஆள் என்ற வகையில்தான் பலரும் அவரை வெளியே இருந்து பார்ப்பார்கள். அவர் அந்த அபிப்ராயத்தை மாற்ற முயற்சிக்கவில்லை. பைத்தியங்களும் இந்த உலகத்தில் வாழ வேண்டுமல்லவா?
இப்போது அவருடன் நாயும் பூனையும் கிளியும் மட்டுமே இருக்கிறார்கள். மற்ற உயிரினங்கள் அனைத்தையும் அவர் சுதந்திரமாக வாழட்டும் என்று விட்டுவிட்டார். கூண்டைத் திறந்து விட்டுக்கொண்டு, அவர் அனைவருக்கும் விடுதலையை அறிவித்தார்.
தங்களுடைய சொந்த நிலையில் ஒவ்வொரு வரும் வாழக்கூடிய சூழல் உண்டாகட்டும் என்று அவர் மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.
ஆனால், பஞ்சவர்ணக் கிளியைக் கூண்டைத்திறந்து வெளியே விடவில்லை. விட வேண்டும் என்று விரும்பினாலும், மனம் சம்மதிக்கவில்லை.
பொன் நிற கூண்டிற்குள் அடைத்து வைத்திருந்தாலும், பால், பழம், பயறு இனங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவளை நல்ல முறையில் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவளுக்குப் பாடுவதற்குத் தெரியும்.
அவளுடைய குரலுக்கு என்னவென்று கூற முடியாத அளவிற்கு இனிமையும் ஈர்ப்பு சக்தியும் இருந்தன. எனினும், அவளிடமும் ஒரு கெட்ட குணம் இருந்தது. ரகசியமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பலவற்றையும் கிளி தன் வாய்மொழியாக கூறியது. அவள் காரணமாக பல ரகசியங்களும் கடை வீதி பாட்டாக ஆயின. அரண்மனை ரகசியங்கள் அங்காடியில் பாடலாக ஆனால், பகைவர்கள் பதுங்கியிருந்து கொல்லுவார்கள் என்ற உண்மை அவளுக்குத் தெரியாமல் இருந்தது.
சுதந்திரத்தின் ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடக்கூடிய புலர்காலைப் பொழுதில் அவள் கூண்டிற்கு வெளியே இறந்துகிடப்பது அவருடைய பார்வையில் பட்டது.அவருக்கு அழ வேண்டும் போல இருந்தது. அவர் அவளை அதிகாரத்தை வெளிப்படுத்தும் இரும்புக் கோட்டையான கம்பிகள் நிறைந்த கூண்டிற்குள்ளிருந்து வெளியேறும்படி செய்திருந்தால், அந்த பஞ்சவர்ணக்கிளி எங்காவது போய் தப்பித்திருக்கும்.
இனி கூறி பயனில்லை. நடக்க வேண்டியது நடந்து முடிந்திருக்கிறது.
யாரை வேண்டுமானாலும், குற்ற விசாரணை செய்யலாம். அவர் பாசத்துடன் வளர்க்கக்கூடிய நாயையும் பூனையையும் அந்த மரணத்தில் பிரதான குற்றவாளிகளாகக் கூறி விசாரணை அமைப்பிற்கு முன்னால் ஆதாரம் கொடுக்கலாம்.
பாலும் சோறும் மீனும் கொடுத்து வளர்க்கப்படும் பூனையை முதல் குற்றவாளியாக ஆக்கலாம். அந்த பூனை இரவு வேளையில் அவருடன்தான் வந்து படுத்து உறங்குகிறது.
மோசமான செயல்கள் எதையும் அவள் இதுவரை கண்களுக்கு முன்னால் செய்ததில்லை.
ஓணானையும் பல்லியையும் வண்டையும் பட்டாம்பூச்சியையும் கொன்று சாப்பிடக்கூடியவள் அவள் என்ற விஷயம் தெரியும். எனினும், பூனை சுத்தமாக இருக்கும்.
பார்ப்பதற்கு நல்ல குணத்தைக் கொண்டவளாகவும் அழகானவளாகவும் இருப்பாள். இவ்வாறு அவருடன் படுக்கக்கூடிய அந்த அழகியைக் கொலைக் குற்றத்தின் குற்றவாளியாக அவரால் எப்படி நிறுத்த முடியும்?
விடுதலை என்ற மிக உயர்ந்த பதவியில் வாழக்கூடிய பஞ்சவர்ணக் கிளியைக் கொன்றதில் பூனைக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று வேண்டுமானால், உறுதியான குரலில் வாதிடலாம். ஆனால், அதற்கு வேண்டிய ஆதாரங்கள் இல்லை.
கொல்லுவதைப் பார்த்திருந்தால், உயர்தர இனத்தில் பிறந்த பூனையைத் தண்டித்து அங்கிருந்து வெளியேறச் செய்திருக்கலாம். கோணியில் கட்டி ஏதாவது ஆளில்லாத இடத்திற்குக் கொண்டு சென்று போட்டிருக்கலாம்.
ஆதாரங்கள் இல்லாத சூழலில் அது தேவையில்லை என்று நினைத்தார்.
பிறகு... இருப்பது...
வீட்டிற்குள் வசிக்கும் இன்னொரு உயிரினம்.... செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பாமரேனியன் நாய்... டர்ஜின்.
டர்ஜின் சைவம் சாப்பிடுபவன். அவன் எந்தவொரு உயிரினத்தையும் கொன்று தின்பதில்லை.
மிகவும் அமைதியான குணத்தைக் கொண்டவனாகவும் எஜமானின் மீது வைத்திருக்கும் அன்பிற்குச் சரியான உதாரணமாகவும் இருக்கக்கூடிய டர்ஜின்மீது கொலைக்குற்றம் சுமத்துவது சரியாக இருக்காது. டர்ஜினை சந்தேகப்படுபவனை தெய்வம் எந்தக் காலத்திலும் மன்னிக்கவே மன்னிக்காது.
பிறகு... அங்கு இருப்பது... ஒரு ஆள் மட்டுமே... அது.. அவர் மட்டுமே..சாதாரண ஒரு மனிதர்...
மனிதன் தன் சொந்த மனசாட்சியை வஞ்சித்து, செய்யக்கூடிய செயல்களுக்கான தண்டனை...
இன்றில்லாவிட்டால்.. நாளை... கிடைக்கும். தண்டிக்கப்படும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு அவர் மாமரத்திற்கடியில் அமர்ந்திருந்தார்.